Wednesday, 7 March 2018

யாதுமானவள் உருவான கதை

யாதுமானவள் உருவான கதை
February 3, 2012 ISR Selvakumar 3 Comments Anamika, ISR, Shortfilm, Sujatha, அனாமிகா, குறும்படம், சுஜாதா, யாதுமானவள்

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் அனாமிகா சிறுகதையை ஆனந்தவிகடனில் வாசித்திருக்கிறீர்களா? பிறப்பையும், இறப்பையும் பற்றி தத்துவார்த்தமாக கேள்வி எழுதும் கவிதைப் பெண் ஒருவள், அந்தக் கவிதையை எழுதிய மறுநாள், மெரினா கடற்கரையில் சுனாமியில் சிக்கி அலையோடு அலையாக மறைந்துவிடுகிறாள். ஒரு கவிதை போல ஆச்சரியப்படுத்தி திடீரென மறைந்த அந்தப் பெண்ணின் பெயர் அனாமிகா. அனாமிகா என்றால் பெயரில்லாதவள் என்று பொருள். பெயரில்லாதவள் திடீரென ஒரு சுனாமி அலையில் அவளே இல்லாமல் போகிறாள். இதில் நெகிழ வைப்பது என்னவென்றால் அனாமிகா கற்பனை கதாபாத்திரம் அல்ல. அவள் ஒரு நிஜப்பெண்.
ஃபேஸ்புக் வழியாக நண்பரான திரு.பாலாசிங், இந்தியா வந்திருந்தபோது, கதை கவிதை என இலக்கிய நிமிடங்களில் கரைந்துகொண்டிருந்தோம். அப்போது அவர் திடீரென சுஜாதாவின் அனாமிகா படிச்சிருக்கீங்களா என்றார். ஒரு முறைக்கு இரு முறை சுஜாதா அனாமிகாவை தனது வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்ததால் எனக்கு அனாமிகாவை தெரிந்திருந்தது. அந்தப் பெண்ணின் நினைவுகள் சுவடுகளாகவே எனக்குள் பதிந்திருந்தது. அதனால் ஒரு கவிதை தரும் பரவசம் போல வாழ்ந்து மறைந்த அந்த இளம் பெண்ணை தெரியுமே என்றேன்.  பாலாசிங் ஒரு கணம் தாமதித்து, அந்தப் பெண் என்னுடைய மகள் என்பது தெரியுமா என்றார்.

மனதுக்குள் பேரிடிகளை அடக்கிக் கொண்ட அமைதியை தனது பார்வைகளில் தேக்கிக் கொண்டு என் மகள் தான் அனாமிகா என்றார். அவருடைய சின்னச் சின்ன வார்த்தைகளில் இழப்பின் வலிகள் மிகுந்திருந்தன. தேவதை போன்ற ஒரு மகளை, தத்துவமாக வாழ்க்கையை நேசிக்கத் துவங்கியிருந்த மகளை ஒரு முடிந்து போன கவிதையாக அவர் தனது மனதில் சுமந்திருந்தார்.

அவருடைய பார்வைகளை உற்று நோக்கிய அந்த ஏதோ ஒரு கணத்தில் தான் எனக்குள் யாதுமானவள் பிறந்திருப்பாள் என நினைக்கிறேன். அனாமிகா என்று பெயரிட்டு அடுத்த நாள் ஒரு ஸ்க்ரிப்ட் தயார் செய்தேன். அது அனாமிகாவைப் பற்றிய கதை. அதனால் அனாமிகாவின் தந்தையே அதில் நடித்தால் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று, அவரிடம் சம்மதம் கேட்டேன். அவரும் சம்மதித்தார். ஆனால் வார்த்தைகளில் சிக்காத கவிதைகள் போல, அவரை வைத்து படமாக்கும் சந்தர்ப்பங்கள் நழுவிக் கொண்டே இருந்தன. தவிர்க்க இயலாத காரணங்களால் அவர் லண்டன் திரும்ப வேண்டியதாகிவிட்டது.

எனக்கு அவருக்கு மாற்றாக யாரையும் சிந்திக்க முடியவில்லை. என்னுடைய சித்தப்பா, திரு.ஐ.எஸ்.சோலை என் மனதிற்குள் உட்காரும்வரை. அனாமிகா ஸ்க்ரிப்டை அவரிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னபோது, வாசித்து முடித்தபின் கண் கலங்கியிருந்தார். கதாபாத்திரத்துக்குள் அவர் மூழ்கிவிட்டார் என்பது, அவருடைய கலங்கிய கண்கள் எனக்குச் சொன்ன செய்தி. உடனே அவரையே நடிக்க வைக்க முடிவு செய்தேன். அனாமிகா யாதுமானவள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாள்.  இப்படித்தான் யாதுமானவள் உருவானாள்

செல்வகுமார்
சென்னை

No comments: