Wednesday, 7 March 2018

இன்றைய நாள் 26.12.2004

இன்றைய நாள் 26.12.2004

எல்லா நாட்களையும் போலவே இன்றும் விடிந்தது வாழ் நாள் முழுவதும் பெரும் துயரத்தை சுமந்த நாள் என யாரும் அறிந்திருக்கவில்லை.
ஞாயிற்றுக் கிழமையானதால் தேவாலையங்கள் நிறைந்திருந்தன கோயில்களில் காலை வழிபாடு களை கட்டியிருந்தன .மசூதிகளில் பலர் தொழுகையில் இருந்தனர்,பன்சலைகளில் பிரித் ஒலி முழங்கிக் கொண்டிருந்தது.எந்த கடவுளர்களும் கண்டு கொள்ளாத வகையில் சுனாமி சுழன்றெழுந்து ஈழக் கரையெங்கும் இடறி குடைந்து கொள்ளையிட்டது இன மத மொழி வேறு பாடின்றி லட்சக் கணக்கானோர் கடல் மடியில் மான்டு போயினர்.

மட்டக் களப்பு தன் முகமிழந்து அழுது மாண்டது எல்லோர் வீடுகளிலும் ஓலம் தெருவெங்கும் பிணங்கள் தீர்த்தக் கரை புனிதத்தை இழந்து பிணங்களை சுமந்து மாறாத சோகத்தை தன் மடியில் சுமந்தது.
என் செல்ல மகளும் பல லட்சம் பேர்களில் ஒருத்தியாய் என் ஒரே மகள்
பலர் குடும்பம் குடும்பமாய் மாண்டு போயினர்
தீர்த்தக் கரையில்
துவண்டு கிடந்த
என் மகளை
ஏந்தி தூக்கிய அந்த கணத்தில்
நானும் தொலைந்து போனேன்
என் கண் முன்னால்
பிரபஞ்சமே சுருங்கிப் போனது
கடவுளர்கள் எல்லோரும்
என் காலடியில்
மண்டியிட்டுக் கிடந்தனர்



என் மகளின் மரணத்தை ஈழத்தின் தலை சிறந்த கவிஞர்களில் ஒருவனான என் தோழமை சு.வில்வரெத்தினம் இப்படிப் பாடியிருக்கிறான்
''தீர்த்தக் கரை கிடக்கிறது
வெறுமனே ஒன்றும் நிகழாதது போல
வெண்ணிலவு
காய்ந்து கிடக்கிறது வெறுமனே
நீ புகுந்த பொங்கு மடு
மாமாங்கத் தீர்த்தக் கேணியருகே
உனைப் பார்த்திருந்தோம்
பூத்திகழும் பொன் மேனிப்
புனித மலரே
பூ
எறியும் உனது
மென் சொற்களின்
தேனுண்டவர் நாம்
நீ
உமிழ்ந்த இறுதிச் சொல்
எந்த அலையில்
மிதந்து கிடக்கிறது
சொல்
வாழ்வின் உட் பொருள் தேடி
முகக்கும் உனதறிவின்
வாயுண்டு உமிழ்ந்த சொல்லின்
பொருள் என்ன
தெற்கு மூலையில்
யமன் திசையில்
காத்திருக்கும் எங்களுக்கு
சேதியினை சொல்லி விடு"
சு.வில்வரெத்தினம்
.
சுனாமியில் மரணித்த எல்லோர் நினைவாகவும்

No comments: